articles

img

வேளாண் விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதாரவிலை அறிவிப்பு -சாமி.நடராஜன்

2014 முதல் ஒன்றிய ஆட்சி அதிகாரத்தில் உள்ள நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு மிக வேகமாக செயல்படுத்தி வரும் தாராளமயக் கொள்கைகளால் இந்திய வேளாண் சமூகம் பெரும் பாதிப்புகளை எதிர்கொண்டு வருகிறது. குறிப்பாக நாடு முழுவதும் விவசாய உற்பத்திச் செலவுகள் பல மடங்கு உயர்ந்துள்ளது. விவசாயிகள் உற்பத்தி செய்யும் விளைபொருட்களுக்கு கட்டுபடியான விலை கிடைப்பதில்லை.

விளைபொருட்களை அரசின் பொது கொள்முதல் மூலம் முழுமையாகச் செய்வதற்கான உத்தரவாதம் இல்லாத நிலை மற்றும் வேளாண் இடுபொருட்களுக்கும் ஒன்றிய அரசின் ஜி.எஸ்.டி வரிவிதிப்பு ஆகியவற்றின் காரணமாக வேளாண் நெருக்கடிகள் எப்போதும் இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளது. கூட்டுறவு மற்றும் பொதுத்துறை வங்கிகள் விவசாயிகளுக்கு தேவையான அளவிற்கு பயிர்க்கடன் மற்றும் வேளாண் முதலீட்டு கடன்களை கொடுக்காததால், கூடுதல் வட்டிக்கு தனியார் நிறுவனங்களிடம் விவசாயிகள் கடன் பெறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

2014க்கு முன் ஆட்சிக்கு வருவதற்கு முன் மோடி தனது  தேர்தல் வாக்குறுதியில் விவசாயிகள் தற்கொலையை தடுப்போம், விவசாயிகளுக்கு தேசிய விவசாயிகள் ஆணையம் பரிந்துரைப்படி கொள்முதல் விலை  வழங்குவோம் என உறுதியளித்தார். மோடி ஆட்சியில் விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாத தால்  கடந்த 10 ஆண்டுகாலத்தில் தினந்தோறும் 31 விவசாயி கள் தற்கொலை செய்து இறப்பது தொடர்கிறது. இன்றுவரை மோடி விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறை வேற்றாமல் துரோகம் செய்து வருவதோடு உண்மைக்கு மாறாக பொய்யையும் புரட்டையும் வெளியிட்டு வருகிறார். 

குறைந்தபட்ச ஆதரவு விலை சி2+50

வேளாண் விளைபொருட்களுக்கான ஒன்றிய அரசின் குறைந்தபட்ச ஆதரவு விலை (எம்.எஸ்.பி) என்பது தேசிய விவசாயிகள் ஆணையம் பரிந்துரை, சி2+50 என்ற பார்முலா படி அமைந்திட வேண்டும் என குறிப்பிட்டுள்ளது. இதில் சாகுபடிக்கு ஏற்படும் செலவுகளை கணக்கிடும் போது 1. இடுபொருட்களுக்கான செலவுகள், 2. வேலை ஆட்கள்  கூலி, 3. இயந்திர வாடகை (அ) தேய்மானம், 4. குடும்ப உறுப்பினர்களின் உழைப்பிற்கான கூலி, 5. நிலத்திற்கான வாடகை உள்ளிட்டவற்றை கணக்கீடு செய்து உற்பத்திச் செலவுகளோடு சேர்த்து, இதற்கு மேல் 1.5 மடங்கு சேர்த்து விலை தீர்மானித்திட வேண்டும் என ஆணையம் 2013ஆம் ஆண்டில் பரிந்துரை செய்தது. ஆனால் ஒன்றிய அரசு இதன் அடிப்படையில் இதுவரை குறைந்தபட்ச ஆதார விலையை விவசாயிகளுக்கு வழங்கவில்லை. உதாரண மாக 2024-25க்கான “காரீஃப்” பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை 14 வேளாண் விளை பொருட்களுக்கு சில நாட்களுக்கு முன்பு ஒன்றிய தகவல்  மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்தார். அதில் உற்பத்திச் செலவுகளை விட கூடுதலாக 1.5 மடங்கு அதிகமாக விலை அறிவித்துள்ளோம் என தவ றான தகவலை வெளியிட்டு விவசாயிகளை ஏமாற்றுகிறார். ஒன்றிய அரசு அறிவித்துள்ள 14 விளைபொருட்களுக்கு சி2+50 படி விலை அறிவித்திருந்தால் அது கீழ்க்கண்டபடி அறிவித்திருக்கப்பட வேண்டும். (அட்டவணை)

சி2+50ன் படி விலையை விவசாயிகளுக்கு கொடுக்கா மல் மோடி அரசு தொடர்ந்து வஞ்சித்து வருவதோடு, உற்பத்திச் செலவுகளுக்கு மேல்  50 சதவிகிதம் கூடுதலாக விலை கொடுத்துவிட்டோம் என தொடர்ந்து பொய்யான செய்திகளை ஒன்றிய அரசு வெளியிடுகிறது. தற்போது அறிவித்துள்ள குறைந்தபட்ச ஆதார விலையை கணக்கீடு செய்திடும் “விவசாயச் செலவுகள் மற்றும் விலைகள் ஆணையத்தின் (CACP)” கணக்கீடுகள் முறையாக செய்யப்படுவதில்லை. ஒப்பீட்டளவில் மிக, மிக குறைவான அளவு உள்ள மாநிலங்கள் (அல்லது) யூனியன் பிரதேசங்களின் உற்பத்திச் செலவுகளை கணக்கீடு செய்து அறிவிக்கப்படுகின்றன. இதனால் மாநிலங்களின் உற்பத்திச் செலவுகளின் கணிப்பை விட மிகக் குறைவாக CACP–யின் கணக்கீடுகளே உள்ளன.

உண்மையான எம்.எஸ்.பி  விலையை அறிவித்திடு

ஓராண்டிற்கும் மேலாக தலைநகர் தில்லியில் நடைபெற்ற விவசாயிகளின் போராட்டத்தில் பிரதானமாக முன் வைக்கப்பட்ட கோரிக்கைகளில் ஒன்று குறைந்தபட்ச ஆதார விலை சி2+50இன் படி வேளாண் விளை பொருட்களுக்கு விலை அறிவிக்க வேண்டும். இதை நாடு முழுவதும் அமல்படுத்திடுவதற்கு நாடாளுமன்றத்தில் மத்திய சட்டம் இயற்றிட வேண்டும் என்பதாகும். தில்லி போராட்டத்தை தலைமை தாங்கி நடத்திய ஐக்கிய விவசாயிகள் முன்னணி (எஸ்.கே.எம்) அமைப்போடு பேச்சுவார்த்தை நடத்திய ஒன்றிய அரசு இந்த கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு நிறைவேற்றுவதாக உறுதியளித்தது. ஆனால் இதுவரை நிறைவேற்றாமல் விவசாயிகளை ஏமாற்றி வருகிறது.

பருவநிலை மாற்றங்களால் ஏற்படும் விவசாயப் பாதிப்புகள் அதிகரித்து வரும் சூழலில், மிக அதிகமாக ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துவரும் இடுபொருட்களின் விலை ஏற்றத்தால் நாடு முழுவதும் சிறு, குறு, நடுத்தர விவசாயிகள் இனிமேல் தொடர்ந்து விவசாயம் செய்ய முடியாத அளவிற்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே, ஒன்றிய அரசு விவசாயிகளுக்கு கொடுத்த உறுதியை நிறைவேற்ற வேண்டும். குறிப்பாக, குறைந்தபட்ச ஆதார விலையை சி2+50இன்படி விவசாயிகளுக்கு வழங்கிட வேண்டும். குறைந்தபட்ச ஆதார விலைக்கான மத்திய சட்டத்தை நாடாளுமன்றத்தில் கொண்டுவர வேண்டும்.

விவசாய இடுபொருட்களுக்கு விதித்துள்ள ஜிஎஸ்டி வரியை நீக்கிட வேண்டும் வேளாண் விளைபொருட்களை அரசே பொதுகொள்முதல் மூலம் செய்திட வேண்டும். அனைத்து வேளாண் விளைபொருட்களுக்கும் குறைந்த பட்ச ஆதரவு விலையை ஒன்றிய அரசு வழங்கிட வேண்டும்.

கூட்டுறவு மற்றும் பொதுத்துறை வங்கிகளில் விவசாயிகளுக்கான பயிர்க்கடன் மற்றும் வேளாண் முதலீட்டுக் கடன்களை குறைந்த வட்டியில் வழங்கிட வேண்டும்.

விவசாயிகள் முழு பயன்பெறும் வகையில் பயிர்காப்பீட்டு திட்டம் மாற்றியமைக்கப்பட வேண்டும்.

 

;